விருதுநகர் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி

விருதுநகர் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5¼ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார்.
விருதுநகர் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி
Published on

விருதுநகர்,

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு, பூமிபூஜை செய்து கட்டிட பணியை தொடங்கிவைத்தார். பின்ன நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலானி பேசியதாவது:-

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி கடந்த 2005-ம் ஆண்டு முதல் 50 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 300 மாணவிகள் பயிலும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 2 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கணினி ஆய்வகம், ஒளி மற்றும் ஒலி அரங்கம், நூலகம், பல்நோக்கு அரங்கம், அலுவலர் அறைகள் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் வருடத்திற்கு 100 மாணவிகள் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பிற கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக ரூ.40 லட்சம் மதிப்பில் ஒரு பஸ்சும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, குடும்பநலம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் மனோகரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் துரைராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் புவனேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெய்துரை, வேல்முருகன், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சற்குணம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com