விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு நிதியிலான திட்டப்பணிகள் முடக்கம்

விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு நிதியிலான திட்டப்பணிகள் முடங்கியுள்ள நிலையில் அப்பணிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு நிதியிலான திட்டப்பணிகள் முடக்கம்
Published on

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி நூற்றாண்டை நிறைவு செய்ததையொட்டி கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தார். இந்த சிறப்பு நிதியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணிகளும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பழைய பஸ் நிலைய புனரமைப்பு பணிகளும் செய்து முடிக்கப்பட்டது.

ரூ.2 கோடி மதிப்பீட்டில் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த நகராட்சி தலைவரின் அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால் அந்த இடத்தில் புதிய கட்டிட கட்டுமானப்பணி எதுவும் தொடங்கப்படாமல் முடங்கிய நிலையில் உள்ளன. இதனால் நகராட்சி அலுவலகத்தில் வருவோருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாத நிலை தொடர்கிறது.

ரூ.5 கோடி மதிப்பீட்டில் 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் அகமது நகர் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி 90 சதவீதமும், கல்லூரி சாலையில் 70 சதவீதமும் கட்டுமானப்பணி முடிந்துள்ள நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளன. நாராயணமடம் தெருவில் பூமிபூஜையுடன் மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணி முடங்கி விட்டது. இந்த மேல்நிலை தொட்டி நகரின் வடக்கு பகுதியில் கட்டப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்த போதிலும் அங்கும் தொடங்கியபாடு இல்லை. ரூ.1 கோடி மதிப்பீட்டிலான நகராட்சி பூங்கா புனரமைப்பு பணி முழுமையாக முடிக்கப்படாத நிலையில் உள்ளது.

தமிழக அரசு நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து 3 வருடங்கள் ஆகியும் திட்டப்பணிகள் முடிவடையாமல் முடங்கியுள்ளதால் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரத்து செய்யப்பட்டு விடும் நிலை ஏற்பட்டு விடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com