விருத்தாசலம்: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து காவலாளி மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து காவலாளி மீது மர்ம கும்பல் தாக்கியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து காவலாளி மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கருவேப்பிலங்குறிச்சி அருகே ஓலையூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் காவலாளியாக பணியாற்றினார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தனக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ராமச்சந்திரன், டாக்டர் வேறு ஒருவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். எனவே சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் காவலாளி ராமச்சந்திரனுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபரை, ராமச்சந்திரன் மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர் நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் ஒன்று, ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியது. மேலும் இதை தடுக்க வந்த செவிலியர் உதவியாளர் கிருஷ்ணன் மற்றும் செவிலியர் ஒருவரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் ராமச்சந்திரன் பலத்த காயமடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதையடுத்து தலைமை மருத்துவர் டாக்டர் சாமிநாதன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று காலை வரை மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் திரண்டு வந்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணி செய்ய தொடங்கினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த ரமேஷ்(வயது 32) மற்றும் அடையாளம் தெரியாத 16 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com