மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் அடிமைகளா? சித்தராமையாவுக்கு, குமாரசாமி கேள்வி

மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் அடிமைகளா? என்று சித்தராமையாவுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் அடிமைகளா? சித்தராமையாவுக்கு, குமாரசாமி கேள்வி
Published on

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மேல்-சபை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கலாக உள்ளது. அப்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மதசார்பற்ற கொள்கை குறித்து தெளிவாக தெரிந்துவிடும் என்று சித்தராமையா கூறியுள்ளார். காங்கிரஸ் மற்றும் சித்தராமையாவின் பார்வையில் மதசார்பற்ற கொள்கை என்றால் என்ன? என்பதை கூற விரும்புகிறேன். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, ஆதரவு வழங்குமாறு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாரும் என்னிடம் கேட்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மதசார்பற்ற கொள்கை குறித்து பரீட்சை நடக்கிறது என்று சித்தராமையா கூறியது, ஆணவத்தின் வெளிப்பாடு. ஆதரவு கேட்காத நிலையில் தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் என்ன அடிமைகளா?. காங்கிரசின் இன்றைய மோசமான நிலைக்கு ஆணவமே முக்கிய காரணம். எங்களின் மதம், கடவுள் பக்தியில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள், அதே நேரத்தில் மற்றவர்களின் நம்பிக்கைக்கு மரியாதை அளிப்பது, அவர்களை சரிசமமாக நடத்துவது தான் தேவேகவுடாவின் மதசார்பற்ற கொள்கை என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

ஆனால் சித்தராமையாவின் கருத்து, இதற்கு எதிர்மறையானது. சாதிகளை உடைப்பது தான் சித்தராமையாவின் மதசார்பற்ற கொள்கை. பா.ஜனதாவின் பி பிரிவு என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியை காங்கிரசார் குறை சொல்கிறார்கள். காங்கிரஸ் தான் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பி பிரிவு. குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கியது காங்கிரஸ் மேலிடம் என்று சித்தராமையா கூறியுள்ளார். அப்படி என்றால் என்னை முதல்-மந்திரி ஆக்கியதில் அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. அதனால் தான் எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை சித்தராமையா கவிழ்த்தார்.

மதசார்பற்ற கொள்கை, தேவேகவுடாவின் நிலைப்பாடு விஷயத்தில் சித்தராமையாவிடம் இருந்து நாங்கள் கற்க வேண்டிய அவசியம் இல்லை. நான் நட்சத்திர ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தாக சித்தராமையா குறை கூறி இருக்கிறார். நான் நட்சத்திர ஓட்டல் மற்றும் குடிசை இரண்டில் இருந்தும் ஆட்சி செய்துள்ளேன். சாமானிய மக்களுக்கு நான் செய்த அளவுக்கு உதவிகள் வேறு யாரும் செய்தது இல்லை. இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com