வாக்காளர்கள் தாமாக முன்வந்து, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் அறிக்கை

வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அன்பு செல்வன் கூறி உள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர்கள் தாமாக முன்வந்து, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் அறிக்கை
Published on

கடலூர்,

வருகிற 1-1-2020-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்திடும் பணியை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்ததன் பேரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 30-ந்தேதி வரை வாக்காளர்களே தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இத்திட்டத்துக்கான காலஅவகாசத்தை வருகிற 15-ந்தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எனவே வருகிற 15-ந்தேதி வரை வாக்காளர்களே தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களை வோட்டர் ஹெல்ப்லைன் என்ற செல்போன் செயலி மூலமாகவோ, என்.வி.எஸ்.பி. போர்டல் மூலமாகவோ, வாக்காளர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலை பேசி எண் 1950 மூலமாகவோ அல்லது வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் இயங்கும் வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாகவோ சரிபார்த்துக்கொள்ளலாம்.

அவ்வாறு சரிபார்க்கும் போது தங்களது விவரங்கள், புகைப்படம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, என்.பி.ஆர். ஸ்மார்ட் கார்டு, சமீபத்தில் வழங்கப்பட்ட குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது, பான்கார்டு ஆகிய ஆவணங்களின் அடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். அதேப்போல் இறந்த வாக்காளர் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து பெயர்களை நீக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com