பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு எதிரொலி: வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக குறைந்தது

நீர்வரத்து குறைந்ததாலும், பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக குறைந்துள்ளது.
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு எதிரொலி: வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக குறைந்தது
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த ஆண்டில் வைகை அணை 2 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மதுரை மாவட்டத்துக்கு 2-ம் போக நெல் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்திற்கு கைகொடுத்ததால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 60 அடிக்கும் மேலாக நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்துக்காக தொடர்ந்து திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே, வைகை அணைக்கு நீராதாரமாக உள்ளது.

வைகை அணையில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. தற்போதைய நீர்இருப்பு மூலம் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளி விட்டு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 57.35 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 540 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,710 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 3 ஆயிரத்து 115 மில்லியன் கன அடியாக இருந்தது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com