ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் தண்ணீர் திறப்பு - கலெக்டர் பல்லவி பல்தேவ் பங்கேற்பு

ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.
ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் தண்ணீர் திறப்பு - கலெக்டர் பல்லவி பல்தேவ் பங்கேற்பு
Published on

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியது. மேலும் தொடர் நீர்வரத்தால் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நிரம்பி உபரி தண்ணீர் வரட்டாறு வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. இந்த அணையின் மூலம் அந்த பகுதியில் உள்ள ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, புத்தம்பட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

இதன் மூலம் இங்குள்ள 1,640 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது. இதில் தென்னை, வாழை, திராட்சை உள்ளிட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை சண்முகாநதி அணையில் இருந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்துவிட்டார். நாள் ஒன்றுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 14.47 கனஅடி வீதம் 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, முதல்-அமைச்சர், மற்றும் துணை முதல்-அமைச்சர் உத்தரவின் படி சண்முகாநதி அணையில் இருந்து புன்செய் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வம், உதவி செயற்பொறியாளர் கதிரேஷ்குமார், உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, சுரேஷ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com