சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
Published on

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதி மற்றும் சுருளி வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் வருகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 52.50 அடி ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு அணை நிரம்பியது. அதன் பிறகு மழை பெய்தும் அணை நிரம்பவில்லை. அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து மொத்த உயரமான 52.50 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது.

அணையின் நீர்வரத்து வாய்க்கால்களை அந்த பகுதியில் உள்ள தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததால் மழை பெய்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக அணை நிரம்பாமல் இருந்தது. இதுகுறித்து கடந்த மாதம் தினந்தந்தியில் செய்தி வெளியானது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். இதனை அடுத்து சமீபத்தில் பெய்த மழையினால் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.

இந்த அணையின் மூலம் ஆனைமலையன்பட்டி, சின்ன ஓவுலாபுரம், எரசைக்கநாயக்கனூர், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அணை நிரம்பி இருப்பதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலிறுத்தியுள்ளனர்.

இது குறித்து சண்முகாநதி விவசாய சங்கத்தினர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், சண்முகாநதியில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது அணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com