

படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மணிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின் மோட்டார் பம்புகள் மூலம் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மணிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் ஊருக்குள் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மணிமங்கலம் பெரிய காலனி கிழக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நிலத்தடி நீர் திருடப்படுவதை கண்டித்து தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து மணிமங்கலம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.