அ.தி.மு.க. அணிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை வழிமுறைகள் என்ன? - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.க. அணிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை வழிமுறைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அ.தி.மு.க. அணிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை வழிமுறைகள் என்ன? - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகிய அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் போது, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைக்கு 18 வயது முதல் 30 வயது நிரம்பியவர்கள், ஜெயலலிதா பேரவைக்கு 20 வயது முதல் 40 வயது நிரம்பியவர்கள், எம்.ஜி.ஆர். இளைஞர் அணிக்கு 20 வயது முதல் 35 வயது நிரம்பியவர்கள் என்று வயது வரம்பை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அமைப்புகளில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டவர்கள் அனைவரும் நடைபெற உள்ள அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள். எனவே இவர்கள் அனைவரும் அ.தி.மு.க. உறுப்பினர் உரிமை சீட்டுகளை தனியாக பெற தேவையில்லை.

மாவட்ட செயலாளர்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்புகளுக்கான உறுப்பினர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு இப்பணியை செய்து முடித்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நேற்று வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்கு கடைசிநாள் 10.8.2020 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சேர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டி, மாவட்ட செயலாளர்களும், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கட்சி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com