போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? - ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஐ.பி.எல். போட்டி நடைபெறும் போது எந்த அணி வெற்றி பெறும் என்று கூறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? - ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
Published on

பேரூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

20 ஓவர்கள் கொண்ட ஐ.பி.எல். போட்டி நடைபெறும் போது எந்த அணி வெற்றி பெறும்? எந்த வீரர் எவ்வளவு ரன் அடிப்பார்?, எந்த ஓவரில் எத்தனை ரன், சிக்சர் அடிக்கப்படும் என்பது உள்ளிட்டவை குறித்து பந்தயம் கட்டி வடமாநிலங்களில் சூதாட்டம் நடைபெறும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியை மையமாக வைத்து கோவை அருகே ஆலாந்துறை பஸ்நிறுத்தம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அங்குள்ள ஒரு கடையில் டி.வி.யில் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. அதை பார்த்துக் கொண்டு இருந்த 4 பேர் எந்த அணி வெற்றி பெறும்? என்பது உள்ளிட்டவற்றை கூறி பணம் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 34), விஜயகுமார் (42), அழகேஸ்வரன் (39), சித்திரைச்சாவடியை சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். ஐ.பி.எல். போட்டி குறித்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com