காட்டு யானை மிதித்து தொழிலாளி பரிதாப சாவு

ஆனைக்கட்டி சேம்புக்கரை மலைக்கிராமத்தில் காட்டு யானை மிதித்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
காட்டு யானை மிதித்து தொழிலாளி பரிதாப சாவு
Published on

துடியலூர்,

கோவை கோட்ட வனப்பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அது போன்று கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப் பகுதி வலசைபாதையாக (வழிப்பாதை) இருக்கிறது. எனவே, காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதை தடுக்க மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைவான பகுதி வழியாக காட்டு யானைகள் மலையோர கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதை கண்காணிக்க வனத்துறை யினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைக்கட்டி சேம்புக்கரை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 41). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரங்கம்மாள் (36). இவர்களுக்கு அருண்குமார் (12) என்ற மகனும், சிந்து (8) என்ற மகளும் உள்ளனர்.

சேம்புக்கரை என்ற மலைக்கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள தூமனூர் கிராமத்தில் முருகேசனின் உறவினர் விக்னேஷ் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் முருகேசன் தூமனூருக்கு நடந்து சென்றார். அங்கிருந்து அவர் இரவு 9 மணிக்கு தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.

அப்போது புதருக்குள் இருந்து காட்டு யானை ஒன்று திடீரென்று வெளியே வந்தது. அதை பார்த்ததும் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடினார். ஆனாலும் காட்டு யானை அவரை விடாமல் துரத்திச்சென்று, துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. பின்னர் காட்டு யானை ஆத்திரம் அடங்காமல், கீழே கிடந்த முருகேசனின் வயிறு மற்றும் தொடைப்பகுதியில் மிதித்தது.

இதில் படுகாயம் அடைந்த முருகேசனின் குடல் வெளியே வந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே நேற்று காலை 9 மணிக்கு அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் முருகேசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தூமனூர் மற்றும் சேம்புக்கரை கிராமங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் இது குறித்து வனத்துறை மற்றும் சின்னத்தடாகம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து வனச்சரக அதிகாரி சுரேஷ் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானை அந்தபகுதியில் சுற்றித்திரிகிறதா? என்பதை அறிய ரோந்து சென்றனர். ஆனால் அந்த யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வனத்துறையினர் அந்த காட்டுயானையை கண்டறிந்து விரட்ட தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

ஆனைக்கட்டியில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த 6 மாதமாக ஒரு காட்டு யானை சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்து வருகிறது. அந்த யானைக்கு சின்ன தம்பி என்று பெயரிடப்பட்டு உள்ளது. தற்போது அந்த யானைக்கு வயிற்று பகுதியில் காயம் உள்ளது. இதன் காரணமாக அது மிகவும் ஆக்ரோஷமாக சுற்றி வருகிறது. எனவே அந்த யானை தான் முருகேசனை மிதித்து கொன்று இருக்க வாய்ப்பு உள்ளது.

அந்த யானை, மற்ற யானைகள் போன்று இல்லாமல் மிகவும் பெரியதாக இருக்கிறது. காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் வனத்துறையினர் அதை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com