வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது.
வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
Published on

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் தாவர மற்றும் மாமிச உண்ணி வனவிலங்குகளின் கணக்கெடுப்பு மற்றும் வாழ்விட மதிப்பீட்டுப்பணி இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு மேலாண்மை பயிற்சி மையத்தில் வன ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் வனவிலங்குகள் கணக்கெடுத்தல் பணியின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து குழுக்களாக வனப்பகுதியில் பார்வையிடுதல், தடயங்கள் உள்பட பல்வேறு முறைகளில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாம்

பயிற்சியை வனச்சரகர்கள் மாரியப்பன், மனோகரன் ஆகியோர் அளித்தனர். இதில் முதுமலையில் உள்வட்ட பகுதியான மசினகுடி, தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை வனசரகங்களை சேர்ந்த வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல வனப்பகுதியில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் மூலம் வனவிலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் 30-ந் தேதி தெப்பக்காட்டில் உள்ள கண்காணிப்பு மையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும். தொடர்ந்து அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் முதுமலை வெளி மண்டலப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com