

மேட்டூர்,
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையையும் சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசனத்தேவையை பூர்த்தி செய்ய 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. இவ்வாறு சேமிக்கப்படும் மழைநீர் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி முடிய டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படுவது வழக்கம்.
இதன்மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதிபெறுகிறது. பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள சுரங்க மின் நிலையம், அணை மின்நிலையம் வழியாக திறந்து விடப்படுகிறது. இந்த மின்நிலையங்களின் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்நிலையங்களில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வெளியேறும் காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்பட 7 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கதவணை மின்நிலையங்களில் தலா 30 மெகாவாட் வீதம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியும் நடைபெறுகிறது.
மீன் உற்பத்தி
இதுமட்டுமின்றி மேட்டூர் அணையின் மூலம் மீன்வளத்தை பெருக்கிட தமிழக மீன்வளத்துறை சார்பில் மேட்டூர் அணை அருகே மீன்விதை பண்ணை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு லோகு, மிர்கால் போன்ற மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை குறிப்பிட்ட அளவு வளர்ச்சி பெற்றவுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த மீன்குஞ்சுகளை அணையின் நீர்தேக்க பகுதிகளுக்கு எடுத்து சென்று விடுகின்றனர்.
அங்கு தங்களுக்கு தேவையான இரையை தேடி அந்த மீன்குஞ்சுகள் வளர்ச்சி அடைகின்றன. பாசன தேவை மற்றும் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட மேட்டூர் அணையின்மூலம் கூடுதலாக மீன் உற்பத்தியும், மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
குடிநீர் திட்டங்கள்
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுக்காததால் மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயப்பணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்தில் சேலம் மாநகராட்சி, மேட்டூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கும், ஒருசில தனியார் தொழிற்சாலைகளுக்கும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. காலப்போக்கில் வேலூர் மாநகராட்சி, பி.என்.பட்டி, வீரக்கல்புதூர் பேரூராட்சி கூட்டுக்குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், கொளத்தூர் பேரூராட்சி, சேலம்-ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் என பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இதுமட்டுமின்றி பாசன வசதிபெறும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்கிறது.
நீர்வரத்து குறைந்தது
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. அதாவது, அணை கட்டப்பட்ட காலத்தில் அணைக்கு வினாடிக்கு லட்சக்கணக்கான கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து ஒருசில ஆண்டுகளுக்கு பிறகு வினாடிக்கு பல ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் குறைந்து கொண்டே சென்றது.
அணையில் இருந்து பாசனத்தேவைக்காக தண்ணீர் திறக்கப்படவேண்டிய இந்த காலக்கட்டத்தில் தற்போது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 153 கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக நாள்தோறும் அணையின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. அதாவது நேற்று முன்தினம் 21.84 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 21.72 அடியாக குறைந்து விட்டது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டதால் குட்டைபோல் மாறி உள்ளது. அணையின் வலது மற்றும் இடதுகரைகளில் தண்ணீரில் மூழ்கியிருந்த கற்கள், மண் திட்டுகள் வெளியே தெரிகின்றன.
குடிநீர் தட்டுப்பாடு
மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் முழுமையான உணவு உற்பத்தி நடைபெறவில்லை. தற்போது இந்த 12 மாவட்டங்களின் குடிநீர் தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.