பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.

இதில் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்பும் வகையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்கு அனுமதி வழங்குமாறு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் எடியூரப்பா அனுமதி கேட்டுள்ளார். மந்திரிசபையை விஸ்தரிக்க விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் எடியூரப்பா காத்திருக்கிறார்.

இதனால் மந்திரி பதவியை பெற பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ரேணுகாச்சார்யா உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்குவது 100 சதவீதம்உறுதி என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இதனால் பா.ஜனதாவில் ரேணுகாச்சார்யா உள்ளிட்ட பல எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற்றால் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகி வருகிறார்கள். இது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இன்னொருபுறம் முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா பீதிக்கு இடையே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அந்த கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் 7-ந் தேதி (நாளை) தொடங்கப்படும் என்று கர்நாடக அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. அதன்படி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நாளை தொடங்குகிறது.

இதில் 10-க்கும் மேற்பட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள், பல்வேறு மக்கள் நல பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதம் வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர்.

அந்த மக்களுக்கு அரசு இன்னும் முழுமையான அளவில் நிவாரணம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் எழுந்துள்ள முறைகேடு புகார், எடியூரப்பா குடும்பத்தினர் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட பிரச்சினைகளை சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது போன்று இன்னும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி புயலை உருவாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு உரிய பதிலடி கொடுக்க எடியூரப்பா உள்ளிட்ட மந்திரிகள் தயாராகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com