முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் பி.எல்.சந்தோஷ் சந்திப்பு மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்

முதல்-மந்திரி எடியூரப்பாவை, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் சந்தித்து பேசினார். அவர்கள் 2 பேரும் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் பி.எல்.சந்தோஷ் சந்திப்பு மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்
Published on

பெங்களூரு,

சுவிட்சர்லாந்து நாட்டில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் கர்நாடகம் திரும்பினார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், கர்நாடக மந்திரிசபை 3 நாட்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்றார். இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது தவளகிரி இல்லத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின்பேரில் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின்போது, மந்திரிசபை விரிவாக்கம் செய்வது, யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் எத்தனை பேருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்த விவாதத்தின்போது, பி.எல்.சந்தோசை தவிர மற்ற யாரும் அங்கு இருக்கவில்லை.

எடியூரப்பா, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு பி.எல்.சந்தோஷ், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 7 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூறியதாக தெரிகிறது. இதற்கு எடியூரப்பா, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் சிக்கல் ஏற்படும் என்றும், அதை எப்படி சமாளிப்பது என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

முதல்-மந்திரி எடியூரப்பா, வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகம் திரும்பியதும், அடுத்த ஓரிரு நாளில் டெல்லி சென்று மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா புதிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எடியூரப்பா இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ஹாசன், மைசூரு, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

அதனால் எடியூரப்பா கூறியபடி 3 நாட்களில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறாது என்றே சொல்லப்படுகிறது. இதனால் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com