திருப்பரங்குன்றம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருப்பரங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபழஞ்சி ஊராட்சியைச் சேர்ந்த தென்பழஞ்சியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தென்பழஞ்சி பஸ் நிலையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வடபழஞ்சி ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டி அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், பருவ மழை பொய்த்துவிட்டது. 1000 அடிக்கும் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்த போதிலும் தண்ணீர் இல்லை. இருந்த போதிலும் 3 நாட்களுக்கு ஒரு முறை தோப்பூரில் இருந்து 2 லாரிகள் மூலமாக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறோம். அனுமதி இன்றி மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை திருடுபவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் பொதுமக்கள் சமரசம் ஆகாமல் மறியலை கைவிட மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வீட்டுக்குள்ளேயே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்கு ஊராட்சி நிர்வாகமே துணை போகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கு மனு அனுப்பி உள்ளோம் என்று பெண்கள் குற்றம்சாட்டினர். இருந்த போதிலும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

குடிநீர் பிரச்சினை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகாயினி கூறுகையில், தென்பழஞ்சி மக்களுக்கு விலைக்கு வாங்கி குடிநீரை லாரிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது நிதி மற்றும் 14-வது நிதி குழு மூலம் ஆழ் துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com