ஊரடங்கு உத்தரவால், பறிக்க முடியவில்லை கொடியிலேயே முற்றி பயனற்று போன வெற்றிலை - விவசாயிகள் கவலை

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெற்றிலைகளை பறிக்க முடியாததால் கொடியிலேயே முற்றி பயனற்று போனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால், பறிக்க முடியவில்லை கொடியிலேயே முற்றி பயனற்று போன வெற்றிலை - விவசாயிகள் கவலை
Published on

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர், நஞ்சமடைகுட்டை, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், வேம்பத்தி, குப்பாண்டம்பாளையம், பிரம்மதேசம், ஒரிச்சேரிபுதூர், செட்டிக்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலைகளை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.

இங்கு பறிக்கப்படும் வெற்றிலை அந்தியூர் மற்றும் அத்தாணி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். ஈரோடு, மேட்டூர், மேட்டுப்பாளையம், ஓமலூர், எடப்பாடி, கர்நாடக மாநிலம் மைசூர், மாதேஸ்வரன் மலை, கர்காகண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து வெற்றிலைகளை வாங்கி செல்கிறார்கள். ராசி வெற்றிலை, பீடா வெற்றிலை, செங்காம்பு வெற்றிலை என பல்வேறு வகைகளில் வெற்றிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ராசி வெற்றிலை என்பது இளம் வெற்றிலை ஆகும். இந்த வெற்றிலைகள் திருமண விழாக்கள், கோவில் விழாக்களுக்கு பயன்படுத்த வியாபாரிகள் வாங்கி செல்வதுண்டு. பீடா வெற்றிலை என்பது ஓரளவுக்கு முற்றிய வெற்றிலை ஆகும். இது பீடா கடைகளில் பயன்படுத்தப்படும். செங்காம்பு வெற்றிலை என்பது முற்றிலும் முற்றிய வெற்றிலை ஆகும். இது ராசி மற்றும் பீடா ரக வெற்றிலைகள் கெடாமல் இருக்கவும், வாடாமல் இருக்கவும் அதன் மேல் வைத்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும். விழாக்கள் போன்ற சீசன் நேரங்களில் ராசி ரக வெற்றிலை கட்டு ஒன்று (100 வெற்றிலைகளை கொண்டது) ரூ.120 முதல் ரூ.160 வரையும், பீடா வெற்றிலை ரூ.80 முதல் ரூ.110 வரையும் விற்பனை ஆகும். செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.6-க்கு விற்பனை செய்யப்படும்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. கடைகள் மற்றும் சந்தைகள் அடைக்கப்பட்டுவிட்டன. வாகன போக்குவரத்தும் இல்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் கூட கிடைப்பதில்லை. இதன்காரணமாக அந்தியூர் பகுதியில் உள்ள வெற்றிலைகளை பறிக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அந்தியூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது முருங்கை மற்றும் அகத்தி மரங்களுக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மரங்களில் வெற்றிலை கொடி போல் படரவிடப்படும். வெற்றிலை கொடி 10 அடி உயரத்துக்கு மட்டுமே வளரவிடப்படும். மரத்தில் பரவி வளர ஏதுவாக வெற்றிலை கொடிகள் வாழை நார் கொண்டு கட்டப்படும். 10 அடி உயரத்துக்கு கொடி செல்வதால் வெற்றிலைகளை பறிக்க சிறிய ஏணி பயன்படுத்தப்படும். அதன் மூலம் கொடியின் நுனியில் உள்ள இளம் வெற்றிலை, பின்னர் ஓரளவுக்கு முற்றிய வெற்றிலை, இதையடுத்து முழுவதும் முற்றிய வெற்றிலைகள் பறிக்கப்படும். வாரத்துக்கு 2 முறை இதுபோன்று வெற்றிலைகள் பறிக்கப்படும். 8 நாட்கள் வரை வெற்றிலைகளை பறிக்காமல் விட்டாலும் அந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்கள் யாரும் வெற்றிலை பறிக்க வரவில்லை. வெற்றிலைகளை பறித்தாலும் அதை வாங்க வியாபாரிகளும் இல்லை. இதனால் நாங்கள் வெற்றிலைகளை பறிக்க முடியாமல் அப்படியே கொடியிலேயே விட்டுவிட்டோம். வெற்றிலைகள் பறிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் வெற்றிலைகள் அனைத்தும் முற்றிவிட்டதுடன், 15 அடி உயரத்துக்கு சென்றுவிட்டது. வெற்றிலைகள் முற்றிவிட்டதால் அவைகள் பயனற்று போய்விட்டன.

இதேநிலை இன்னும் 15 நாட்கள் நீடித்தால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களுடைய வருமானம் முற்றிலும் முடங்கி விட்டது. வெற்றிலை கொடிகளை அழித்துவிட்டு மீண்டும் வளர்க்க வேண்டும் என்றால் 11 மாதங்கள் வரை ஆகும். அதுவரை எங்கள் வாழ்வாதாரம், பொருளாதாரம் கேள்விக்குறிதான். அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com