போதிய ஆவணங்கள் இன்றி நெல் கொள்முதல் செய்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் அதிரடி நடவடிக்கை

போதிய ஆவணங்கள் இன்றி நெல் கொள்முதல் செய்த ஊழியர்கள் 2 பேரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதிய ஆவணங்கள் இன்றி நெல் கொள்முதல் செய்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் அதிரடி நடவடிக்கை
Published on

திருவாரூர்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 210 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கொள்முதல் நிலையங் களில் விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் விவர நகலை சமர்ப்பித்து தங்களது நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அதற்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் யாருக்கும் எவ்வித தொகையும் வழங்க தேவையில்லை. அதில் குறைபாடுகள் இருப்பின், உடன் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப் படும்.

இந்த நிலையில் குடவாசல் பகுதி விவசாயிகளிடம் இருந்து வரப்பெற்ற புகார் மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் குடவாசல் நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர். அப்போது போதிய ஆவணங்கள் இன்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டதும், சிட்டா அடங்கலில் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பணியில் இருந்த ஊழியர்கள் பன்னீர் செல்வம்(பருவகால பட்டியல் எழுத்தர்), சம்பத்(பருவ கால காவலர்) ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் எவ்வித புகாருக்கும் இடமின்றி அனைத்து ஆவணங்களையும் பெற்று கொள்முதல் செய்ய கொள்முதல் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com