குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

கோத்தகிரி அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
Published on

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள அட்டவளை பகுதியில் பாரதிநகர் உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் இருந்த ராட்சத கற்பூர மரங்கள் மழைக்காலங்களில் குடியிருப்புகள் மீது அடிக்கடி விழுந்ததால் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு அருகே உள்ள உயரமாக பகுதியில் மாற்று இடம் அளித்து இடம் பெயர செய்தனர்.

இப்பகுதி மக்களுக்கு பெத்தளா கிராமத்தில் உள்ள தாழ்வான பகுதியில் கிணறு அமைத்து அங்கிருந்து குழாய்கள் மூலம் பாரதி நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பாரதி நகருக்கு கொண்டு வரும் குழாய்களில் இருந்து அருகிலுள்ள குண்டாடா பிரிவு கிராமத்தில் உள்ள சுமார் 40 வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குண்டாடா பிரிவு கிராம மக்களுக்கு தண்ணீரை வினியோகித்த பிறகு தங்களது கிராமத்திற்கு வினியோகம் செய்யப்படுவதின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், தங்கள் கிராமத்திற்கு குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய புதிய கிணறு அமைக்க வேண்டும். அல்லது பெத்தளா கிராமத்தில் உள்ள மற்றொரு கிணற்றில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 11 மணியளவில் காலிகுடங்களுடன் ஊர்த்தலைவர் ஜோஷ்வா தலைமையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அட்டவளை பிரிவு பகுதியில் சாலை மறியல் செய்ய திரண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து பாரதி நகருக்கு புதிய கிணறு அமைத்து குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கிணறு அமைக்க இடத்தையும் அதிகாரிகள் தேர்வு செய்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com