கலாசாரத்தை மதிக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் வெங்கையா நாயுடு மகள் பேட்டி

கலாசாரத்தை மதிக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்று தஞ்சையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகள் தீபா கூறினார்.
கலாசாரத்தை மதிக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் வெங்கையா நாயுடு மகள் பேட்டி
Published on

தஞ்சாவூர்,

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மனைவி உஷா, மகள் தீபா, பேரன் விஷ்ணு, பேத்தி சுஷ்மா மற்றும் உறவினர்கள் 8 பேர் தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்று வந்தனர். இவர்களை கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் வராகி அம்மன், பெருவுடையார், விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். மேலும் நந்தி சிலையையும் வழிபட்டனர். அப்போது சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜசோழன் சிலை, லோகமாதேவி சிலை பெரியகோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் வெங்கையா நாயுடு குடும்பத்தினர் பார்வையிட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை பெரியகோவில் பெருமைகளை சொல்ல வேண்டும் என்றால் அற்புதமானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக செலவு செய்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறோம். அங்கே வரலாற்று ஆவணங்கள், பாரம்பரிய இல்லாதவற்றை அதிசயம் என்று செல்வதை கேட்கிறோம்.

இந்தியாவில் தொன்மையான, வரலாற்று சிறப்பு மிக்க பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தஞ்சை பெரியகோவில். இக்கோவிலுக்கு தனி வரலாறு உண்டு. இங்குள்ள சிலைகள், ஓவியங்கள் கலைநயமானதாக உள்ளன. சோழர்களும், நாயக்கர்களும் இந்த கோவிலை சாமானியமாக கட்டவில்லை. அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இல்லை. எத்தனை பேரை கோவில் கட்டும் பணியில் ஈடுபடுத்தி இருப்பார்கள். இப்படி சிறப்பு மிக்க கோவிலை இந்தியர்களால் மட்டும் தான் கட்ட முடியும். இங்கிருந்து சென்ற சோழ மன்னர் ஒருவர் தான் கம்போர்டியாவில் கோவிலை கட்டியுள்ளார்.

நமது வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்து கூற வேண்டும். உண்மையான இந்தியர்களாக இருந்தால் கோவில்களில் சிலைகளை திருடமாட்டார்கள். கோவில் சிலைகள் தனி மனிதனுக்கு சொந்தமானது அல்ல. நாட்டிற்கும், மக்களுக்கும் சொந்தமானது. உங்கள் வேலை எதுவோ அதை திறன்பட செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சிலைகளை திருடுவது தவறு. சிலைகள் யாரிடமாவது கிடைத்தால் அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

சபரிமலை கலாசாரப்படி குறிப்பிட்ட வயதுடையவர்கள் செல்லக்கூடாது. கலாசாரம், பண்பாட்டை மதிக்கும் நான் உள்பட தென்னிந்திய பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள். அங்கே வேறு காரணங் களுக்காக போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பெரியகோவிலில் 2 மணிநேரம் தரிசனம் செய்த வெங்கையா நாயுடு குடும்பத்தினர் அங்கிருந்து கார்களில் புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com