மகிளா காங்கிரஸ் தலைவி-துணைத்தலைவி இடையே தள்ளு, முள்ளு

மயிலாடுதுறையில், மகிளா காங்கிரஸ் தலைவி, துணைத்தலைவி இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மகிளா காங்கிரஸ் தலைவி-துணைத்தலைவி இடையே தள்ளு, முள்ளு
Published on

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறையில், மகிளா காங்கிரஸ் தலைவி, துணைத்தலைவி இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மகிளா காங்கிரஸ் கூட்டம்

மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 30-ந் தேதி மயிலாடுதுறை வந்த மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காவிரி இல்லத்தில் தங்கினர்.

இதனை அறிந்த மயிலாடுதுறையை சேர்ந்த மாநில மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி மரகதவள்ளி என்பவர் சில பெண்களோடு நேற்று முன்தினம் காலை காவிரி இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற மரகதவள்ளி, தனக்கு தெரிவிக்காமல் எப்படி மயிலாடுதுறைக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள வரலாம்? என மாநில தலைவி சுதாவிடம் கேட்டார்.

வாக்குவாதம்- தள்ளு, முள்ளு

அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி தள்ளு, முள்ளு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மரகதவள்ளி தன்னை அவமானப்படுத்தி திட்டியதாக சுதா மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல சுதாவும் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் கூட்டத்தில் கலந்துகொள்ள மயிலாடுதுறை வந்த தன்னை மரகதவள்ளி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார். இருதரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகிளா காங்கிரஸ் தலைவி, துணைத்தலைவி இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை மிரட்டல்

இதனிடையே கூட்டத்தில் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி சுதா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மகிளா காங்கிரஸ் தலைவி சுதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 74 கட்சி அமைப்பு மாவட்டங்களில் 50 ஆயிரம் பெண்கள், மகிளா காங்கிரசில் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான மகிளா காங்கிரஸ் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதன்படி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்து தங்கி இருந்த அறைக்கு நேரடியாக வந்த மாநில மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி மரகதவள்ளி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.

இதுகுறித்து மாநில தலைவர் அழகிரிக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com