தொழிலாளி குத்திக்கொலை

ஊட்டியில் தொழிலாளி குத்திக்காலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் கொலையை அரங்கேற்றிய மனநலம் பாதித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி குத்திக்கொலை
Published on

ஊட்டி

ஊட்டியில் தொழிலாளி குத்திக்காலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் கொலையை அரங்கேற்றிய மனநலம் பாதித்தவரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் என்ற ஹரி(வயது 35). கூலித்தொழிலாளி. இவர் இன்று அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரான கார்த்திக்(38) என்பவருடன் பஸ்சில் லோயர் பஜாரில் உள்ள நகர பஸ் நிறுத்தத்துக்கு வந்தார்.

பஸ்சில் இருந்து கீழே இறங்கிய பிறகு அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கார்த்திக்கை ஹரி அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அருகே பாத்திர கடையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஹரியை குத்த ஓங்கினார். இதை பார்த்து பயந்து போன ஹரி உடனடியாக அருகில் உள்ள பயணிகள் நிழற்குடைக்குள் ஓடினார்.

குத்திக்கொலை

எனினும் துரத்தி வந்த கார்த்திக் எதிர்பாராத நேரத்தில் ஹரியின் வயிற்றில் 3 இடத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஹரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலையை நேரில் பார்த்தவர்கள், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கார்த்திக்கை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து ஹரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது.

கைது

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சனக்கொரையில் இறந்த கருங்குரங்கை கத்தியால் அறுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதும், ஹரியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் திடீரென அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து ஹரியை கொலை செய்த கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையில் கொலை நடந்த பயணிகள் நிழற்குடையில் ரத்தம் படிந்திருந்தது. அங்கு பதிவாகி இருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஊட்டியில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com