பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு - விற்க முயன்ற 3 பேர் கைது

கோவையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. அதை விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு - விற்க முயன்ற 3 பேர் கைது
Published on

கோவை,

கோவை இடையர் வீதி சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் 3 பேர் நின்று இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் பிடிபட்ட 2 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் பழங்கால ஐம்பொன் சிலையின் ஒரு பகுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கோவை சலீவன் வீதியை சேர்ந்த ஹரி என்ற ஜெயச்சந்திரன் (வயது 36) , செல்வபுரம் அமுல்நகரை சேர்ந்த பாலவெங்கடேஷ் (36) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஐம்பொன் சிலையின் ஒரு பகுதியை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

கைதான 2 பேரிடம் ஐம்பொன் சிலையின் சிறிய பாகம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்களிடம் இன்ஸ்பெக்டர் பர்வீன்பானு தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருநாவுக்கரசு (38) ஒட்டன்சத்திரம், தீனதயாளன் (36), அருண் (41) ஆகிய 3 பேரையும் ஒட்டன்சத்திரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 33 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன ஆண் உருவ சிலையும், 20 கிலோ எடையுள்ள பெண் உருவ சிலையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மதுரையில் இருந்து ஒட்டன் சத்திரத்துக்கு கொண்டு வந்து, அதன் ஒரு பாகத்தை உடைத்து கோவையில் விற்க முயன்றுள்ளனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.2 கோடி என்று கைதானவர்கள் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

சிலைகள் பிடிபட்டது குறித்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறும்போது, சிலையின் மதிப்பு குறித்து தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது. சிலைகளை எந்த கோவில் அல்லது அரண்மனையில் இருந்து திருடி வந்தனர் என்று விசாரணை நடத்தப்படு வருகிறது என்றார். சிலைகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையையும் கமிஷனர் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com