காவிரி பிரச்சினையில் உள்ள அரசியலை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் மணியரசன் பேச்சு

காவிரி பிரச்சினையில் உள்ள அரசியலை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் கூறினார்.
காவிரி பிரச்சினையில் உள்ள அரசியலை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் மணியரசன் பேச்சு
Published on

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செயல்படும் மன்னையின் மைந்தர்கள் என்ற அமைப்பு சார்பில் தழைக்கட்டும் தலைமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு அமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகி ஓம்பிரகாஷ் வரவேற்றார். கருத்தரங்கில் காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினைகளுக்கு வலுவான ஆணையங்கள் அமைக்கப்பட்டு, தண்ணீர் பகிரப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மட்டும் காவிரி பிரச்சினையில் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அக்கரையற்ற தேர்தல் அரசியல் ஆகும்.

கர்நாடக மாநிலத்தில் செயல்படும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கூட காவிரி பிரச்சினையில் அந்த மாநிலத்தின் நலனை முன்னிறுத்தி செயல்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆட்சி செய்கின்றனர்.

காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குறைகூறி கொள்கின்றனவே தவிர, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகத்தில் உள்ள அணைகளின் முழு கட்டுப்பாட்டையும் நிர்வகிக்கக்கூடிய, ஆணையத்தை அமைக்க முடியவில்லை. இதனை மத்திய ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகத்தின் தண்ணீர் உரிமை பறிபோகிறது. தண்ணீர் உரிமை என்பதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், அது ஒரு வாழ்வாதார பிரச்சினை என்ற கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். இதில் உள்ள அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டு, எதிர்காலத்தில் தங்களுடைய கடமையை இந்த சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் காவிரி உரிமை மீட்புக்குழு தலைமை ஆலோசகர் டாக்டர் பாரதிச்செல்வன், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், கவிஞர் இலராமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக கஜா புயல் மீட்பு பணிகளில் ஈடுபட்ட 107 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் சுரேஷ்குமார்சீராளன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com