பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு; மழை-வெள்ளத்துக்கு 48,915 வீடுகள் சேதம் - கர்நாடக அரசு தகவல்

கர்நாடகத்தில் மழை-வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், 48 ஆயிரத்து 915 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகம் மற்றும் தென்கர்நாடகத்தின் உள் மாவட்டங்கள் என மொத்தம் 17 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. மழைக்கு நேற்று முன்தினம் வரை 42 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று 6 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து கர்நாடகத்தில் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் மழைக்கு இதுவரை 48 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக பெலகாவியில் 13 பேரும், பாகல்கோட்டை, சிவமொக்கா, தார்வாரில் தலா 3 பேரும், உத்தர கன்னடாவில் 4 பேரும், தட்சிண கன்னடா, உடுப்பி, மைசூருவில் தலா 2 பேரும் மரணம் அடைந்தனர்.

குடகு மாவட்டத்தில் 8 பேர், சிக்கமகளூருவில் 7 பேர், கதக்கில் ஒருவர் மரணம் அடைந்தனர். மேலும் 16 பேர் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் 837 கால்நடைகள் இறந்துவிட்டன. மாநிலத்தில் மொத்தம் 86 தாலுகாக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.

பெலகாவி மாவட்டத்தில் 10 தாலுகாக்கள், பாகல்கோட்டையில் 6, விஜயாப்புராவில் 4, உத்தர கன்னடாவில் 11, தட்சிண கன்னடாவில் 5, தார்வாரில் 5, ஹாவேரியில் 6, கலபுரகியில் 2, சிவமொக்காவில் 7, உடுப்பி, குடகு, மைசூரு, யாதகிரி, ராய்ச்சூர், கதக்கில் தலா 3, சிக்கமகளுரு 4, ஹாசனில் 8, தாலுகாக்கள் வெள்ள பாதிப்பு பகுதிகள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் 2,217 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பெலகாவியில் அதிகபட்சமாக 371 கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 6 லட்சத்து 77 ஆயிரத்து 382 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 1,224 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெலகாவியில் மட்டும் 460 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 51 ஆயிரத்து 15 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்து 595 கால்நடைகள் மீட்கப்பட்டன. இதில் 32 ஆயிரத்து 305 கால்நடைகள், முகாம் வளாகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்திற்கு 4 லட்சத்து 21 ஆயிரத்து 514 எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமாகிவிட்டன.

வெள்ளத்தால் இதுவரை 48 ஆயிரத்து 915 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் பெலகாவியில் மட்டும் 1,378 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இவ்வாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com