விவிபாட்... மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கூட்டாக வலியுறுத்தல்

விவிபாட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.
Published on

வாக்கினை குறிப்பிட்ட வேட்பாளருக்கு அளித்ததை வாக்காளர் பார்த்து உறுதி செய்ய விவிபாட் எந்திரம் வழி வகுத்தது. மின்னணு வாக்கு எந்திரத்தில் நாம் எந்த வேட்பாளருக்கு வாக்குப்பதிவு செய்தோமோ, அந்த வாக்காளருக்குத்தான் வாக்குப்பதிவாகி உள்ளதா என்பதை இந்த விவிபாட் எந்திரம் வாக்காளருக்கு காட்டும். ஆனால் அதன் அச்சிட்ட பதிவு, வாக்காளர்களுக்கு வழங்கப்படாது. அங்கே சேகரித்து பாதுகாக்கப்படும். இதுதான் நடைமுறை.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்களுடன், இந்த விவிபாட் எந்திரங்களும் இணைக்கப்பட்டது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபாட் எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

ஆனால் இது போதாது ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 வாக்குச்சாவடிகளில் பதிவாகிற வாக்குகளையாவது, இப்படி ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க., தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவாகிற வாக்குகளை, விவிபாட் எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மீண்டும் அதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் மேல் முறையீடு செய்தபோது சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.

இப்போது தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதும் எதிர்க்கட்சிகள் அதே கோரிக்கையை முன்வைக்கின்றன. தேர்தல் ஆணையர்களிடம் பேச எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்தனர். ஒரு வாக்குச்சாவடியில் குளறுபடி காணப்பட்டாலும் சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பதிவு மற்றும் விவிபாட் அச்சிட்ட பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com