டெல்லி வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

டெல்லி வன்முறையை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
Published on

சென்னை,

டெல்லி வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.

பொருளாளர் முகமது யூசுப், துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் செல்லதுரை, வி.கோ.ஆதவன், மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

அமித்ஷா மீது குற்றச்சாட்டு

டெல்லியில் மத வெறியர்கள் நடத்திய வன்முறையில் 40 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறையை அடக்க மத்திய அரசின் உள்துறை தவறிவிட்டது. மதவெறி உச்சத்தின் ஒத்திகையே டெல்லி வன்முறை. இதனை தடுக்க எந்த நடவடிக்கையையும் அரசு முறையாக கையாளவில்லை.

உள்துறைக்கு எந்த கவலையும் இல்லை என்பதையே இந்த போக்கு காட்டுகிறது. எனவே டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பதவி விலகவேண்டும். வன்முறை குறித்து பணியில் உள்ள நீதிபதி கண்காணிப்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.

தேர்தலை புறக்கணிப்போம்...

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோருக்கு தகுந்த இழப்பீடுகளும், உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. மதவெறி அடிப்படையில் மக்களை பிளக்க மத்திய அரசு துடிக்கிறது.

குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடக்கிறது. தேர்தலை மனதில் வைத்து நாங்கள் இப்பிரச்சினையில் வீதிக்கு வந்து போராடவில்லை. எங்களுக்கு மக்கள் நலனே முக்கியம். அதற்காக தேர்தலை கூட புறக்கணிக்கவும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com