கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி

குமரி மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் முதல்அமைச்சர் வழிகாட்டுதல்படி அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லை. யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. சுகாதாரத்துறை மூலமாக மாவட்டம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த பகுதி மக்களுக்கும், கடைக்காரர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தன்னம்பிக்கையோடு இந்த வைரஸ்சை சமாளிக்க முடியும் என்று மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வைரஸ் பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கூட்டத்தில் போகும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பற்றிய தகவலை சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். சில நேரங்களில் யாராவது வெளிநாட்டில் இருந்து வந்தால் அக்கம், பக்கத்தில் உள்ள மக்கள் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவருக்கு காய்ச்சல் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தகவல் கொடுத்தால் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில் தவறு இல்லை. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உயிருக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உயிருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

கொரோனா வைரஸ் விஷயத்தில் நமது மாநிலம் கட்டுப்பாட்டுடன் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் வாட்ஸ்அப் தகவல்களை உடனே நம்பாதீர்கள். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டும் நம்புங்கள். இந்த வைரஸ்சை முழுக்க, முழுக்க நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடிய விஷயம். கேரளாவுக்கு வேலைக்குச் சென்று வரக்கூடிய அனைவரையும் பரிசோதனை செய்ய முடியாது. ஈரானில் உள்ள மீனவர்களை நமது நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஈரானில் உள்ள தூதரகம் மூலமாக மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com