பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

மும்பை ஆஸ்பத்திரியில் சுவாச பிரச்சினையால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Published on

மும்பை,

இந்தியாவின் இசைக்குயில் என வர்ணிக்கப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் சுவாச பிரச்சினை காரணமாக நேற்றுமுன்தினம் மராட்டிய மாநிலம் தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்தது. 90 வயது லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லதா மங்கேஷ்கரின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதன் பலனாக அவரது உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லதா மங்கேஷ்கர் நலமுடன் இருப்பதாகவும், தற்போது அவரது உடல் நிலையில் ஏற்பட்டு உள்ள பின்னடைவில் இருந்து மீண்டு வருவார் என்றும் அவரது செய்தி தொடர்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்த பாடகி லதா மங்கேஷ்கர் கடைசியாக மறைந்த யாஷ் சோப்ரா 2004-ம் ஆண்டு இயக்கிய வீர் சாரா படத்துக்கான பாடல்களை பாடியிருந்தார்.

சவுகாந்த் முஜே இஸ் மிட்டி கி என தொடங்கும் பாடலை அவர் கடைசியாக பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com