குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் தூண்டுதலே காரணம் - மத்திய மந்திரி குற்றச்சாட்டு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் தூண்டுதல்தான் காரணம் என்று மத்திய மந்திரி குற்றஞ்சாட்டினார்.
Published on

புதுச்சேரி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய ரயில்வே துறை இணை மந்திரி சுரேஷ் அங்காடி நேற்று புதுவை வந்தார். புதுவை லாஸ்பேட்டை தொகுதி குறிஞ்சி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். அப்போது ஒரு வீட்டில் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். அவர் அந்த வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவரின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

இதே போல் அரியாங்குப்பம், அனிதா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். அப்போது கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ,, பொதுச்செயலாளர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், வி.சி.சி. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கட்சியின் உழவர்கரை மாவட்டம் சார்பில் மேரி உழவர்கரை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பான புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் செல்வாக்கு உலக அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே தான் அவர் வெளிநாடு செல்லும் போது அங்குள்ள மக்கள் அதிக வரவேற்பு அளிக்கின்றனர். இதற்கு காரணம் அவரது செயல்பாடு தான். ஈரான்-அமெரிக்கா பிரச்சினையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியை ஈரான் அழைத்துள்ளது. பா.ஜ.க.வில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட பிரதமர், மத்திய மந்திரி, கட்சி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு வர முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் தாயும், மகனும் தான் மாறி மாறி பொறுப்புக்கு வருகின்றனர். ஏழை எளிய மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம், மக்களுக்கு நேரடியாக சென்று சேர வேண்டும் என்பதற்காக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய அரசு 1 ரூபாய் கொடுத்தால் அதில் 15 பைசா மட்டுமே பயனாளிகளுக்கு போகும் நிலை இருப்பதாக தெரிவித்தார். தற்போது பா.ஜ.க. ஆட்சியில் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் ரூ.1 கொடுத்தால் முழுத்தொகையும் மக்களையே சென்றடைகிறது.

தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா பிரச்சினையில் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கமாட்டேன் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இந்த மசோதா தொடர்பாக நாடுமுழுவதும் விளக்கி கூறவும் அறிவுறுத்தியுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற உடனேயே இந்த மசோதாவை அறிமுகம் செய்திருக்க வேண்டும். இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்கள் யாருக்கும் பாதிப்பு வராது.

தேசிய பிரிவினையின்போது இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 9 சதவீதம் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது 14 சதவீதம் உள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 3 சதவீதம் மட்டுமே சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். 1961-இல் இந்திராகாந்தி இதே 3 நாடுகளில் வாழும் சிறுபான்மையினருக்காக தேசிய குடியுரிமைசட்ட திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று சொன்னார். ஆனால், இப்போதுள்ள காங்கிரஸ் கட்சியினர் அதை எதிர்க்கின்றனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போது அழிந்து வருகிறது. எனவே இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கின்றனர். இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் தூண்டுதலே காரணம். எனவே பொதுமக்கள் அதனை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com