தாம்பரம்,
சென்னை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் கோடை வறட்சியின் காரணமாக வறண்டுவிட்ட நிலையில் கல்குவாரி குட்டைகளில் உள்ள தண்ணீர் மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது.
பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இதையடுத்து பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்த ரூ.6 கோடியே 40 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியில் உள்ள 5 கல்குவாரிகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்காக 5 கல்குவாரிகளிலும் மிதவை படகுகள் அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் கல்குவாரி தண்ணீர் எடுக்கப்பட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இரும்பு குழாய் மூலம் எடுத்து வரப்படுகிறது.
இங்கு 5 கட்டங்களாக தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு இறுதியாக இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றப்பட்டு அனகாபுத்தூர் மற்றும் பம்மல் நகராட்சிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் குடிநீர் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த பணிகள் தற்போது முடிவடைந்து சோதனை ஓட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக அனகாபுத்தூர் நகராட்சிக்கு கல்குவாரிகளில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து அனுப்பப்படுகிறது. இன்னும் ஒருவாரத்தில் குடிநீர் வினியோக பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இதன் பின்னர் பம்மல் நகராட்சிக்கு தினமும் 15 லட்சம் லிட்டர் குடிநீர் மற்றொரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் அனுப்பப்படவுள்ளது. மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் இந்த பணிகளை செய்து வருகின்றனர்.
பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு 2 நகராட்சிகளுக்கும் தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கல்குவாரிகளில் இருந்து வழங்கப்பட உள்ளதால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.
சென்னை புறநகரில் பல்லாவரம், தாம்பரம் உள்பட பல நகராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் திரிசூலம், பழைய பல்லாவரம், தாம்பரம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைகளில் இருந்தும் இந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.