பண்ணந்தூர் ஊராட்சி பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு நீர் நிரப்ப ரூ.23 லட்சத்தில் திட்டப்பணி

பண்ணந்தூர் ஊராட்சி பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு நீர் நிரப்ப ரூ.23 லட்சத்தில் திட்டப்பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
Published on

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பண்ணந்துர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு தண்ணீர் நிரப்புவதற்காக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பில் சோலார் மின் பேனல் பொருத்தி மின் மோட்டார் மூலம் நீரேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை கலெக்டர் பிரபாகர் நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

காவேரிப்பட்டணம் ஒன்றியம் பண்ணந்தூர் பெரிய ஏரியில் இருந்து வடியும் உபரி நீரை சின்ன ஏரி என்று அழைக்கப்படும் புதுகுட்டை ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் பண்ணந்தூர், சின்னஏரி விவசாயிகள் சங்கம் சார்பில் திறந்த வெளிகிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் இருந்து 25 எச்.பி. மின் மோட்டார் மூலம் தண்ணீர் பைப் லைன் மூலம் உயர் மட்ட தொட்டிக்கு நீரேற்றம் செய்து அவற்றில் இருந்து சின்ன ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல ஊராட்சிக்கு அதிகமான மின் கட்டணம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் அரசின் உதவியை நாடினார்கள்.

குடிநீர் வசதிகள் பெறும்

தற்போது ஊரக வளர்ச்சித்துறை சார்பாக சோலார் பேனல் அமைத்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மின் மோட்டார் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சின்ன ஏரிக்கு நீர் செல்வதன் மூலமாக பண்ணந்தூர், பாப்பாரப்பட்டி, வாடமங்கலம், தாமோதரஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதிகள் பெறும். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் இப்பணிகளை நிறைவேற்ற சோலார் பேனல் அமைக்க ரூ.23 லட்சம் மதிப்பில் 30 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் பேனல் அமைத்து மின் மோட்டார் இயக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், போச்சம்பள்ளி தாசில்தார் முனுசாமி, மாவட்ட வேளாண்மை விற்பனை குழு இயக்குனர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் இளங்கோ, சிவலிங்கம், துணை தலைவர்கள் சங்கீதா சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருப்பதி, மாதன், பெரியசாமி, வேலன் மற்றும் விமலா சுப்பிரமணியம், பழனியம்மாள் சேட்டு, கிருபானந்தம், ஊராட்சி செயலாளர்கள் நாராயணசாமி, பழனிசாமி, கே.பி.முருகன், வேணுகோபால், ரஞ்சித்குமார், ராதாகிருஷ்ணன், லோகநாத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com