சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் காவலாளி கைது

பட்டினப்பாக்கத்தில் 9 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தனியார் பள்ளி காவலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Published on

அடையாறு,

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசிப்பவர் தேவராஜ் (வயது 55), சாந்தோம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம், அதே பிளாக்கில் வசிக்கும் 5-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் சாக்லெட் தருவதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பிறகு, வீட்டிற்கு திரும்பிய சிறுமி பயத்தில் சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அப்போது தேவராஜ், சிறுமியை மீண்டும் வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி தனது வீட்டிற்கு ஓடிவிட்டாள்.

பின்னர், சிறுமியின் தந்தை தன்னுடைய மகள் சோர்வாக இருப்பதை கண்டு, விசாரித்தபோது, சிறுமி அழுதபடி நடந்த சம்பவத்தை அவரிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு சென்று, அங்கு வீட்டில் இருந்த தேவராஜுக்கு தர்மஅடி கொடுத்து பட்டினப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், தேவராஜை பட்டினப்பாக்கம் போலீசார் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து தேவராஜிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கமலாதேவி, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். கைது செய்யப்பட்ட தேவராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பேத்தி வயதுடைய சிறுமிக்கு ஒரே குடியிருப்பில் வசிக்கும் நபர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com