ஹாவேரி,
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் டவுனில் மாநில அரசின் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக இங்கு வந்து வாடிக்கையாளர்களிடமோ அல்லது வியாபாரிகளிடமோ விற்று விடுவார்கள். அதேபோல் நேற்று காலையில் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த பூண்டை மார்க்கெட்டில் விற்க கொண்டு வந்தார்கள்.
ஆனால் நேற்று காலையில் பூண்டின் விலை திடீரென வீழ்ச்சி அடைந்தது. ஒரு குவிண்டால்(100 கிலோ ஒரு குவிண்டால்) பூண்டு ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
இதனால் விவசாயிகள் மனம் நொந்து போயினர். வேதனை அடைந்த அவர்கள் திடீரென மார்க்கெட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த ராணிபென்னூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்கு விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பூண்டுகளை மார்க்கெட் முன்பும், அவ்வழியாக செல்லும் சாலையிலும் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் விலை வீழ்ச்சியால் அதிர்ச்சி அடைந்த பெண் விவசாயி நாகம்மா என்பவர் போராட்டத்தில் களத்தில் மயக்கம் அடைந்து நிலைகுலைந்து விழுந்தார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் நாகம்மாவை மீட்டு சிகிச்சைக்காக ராணிபென்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கடந்த வாரம் ஒரு குவிண்டால் பூண்டு ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு குவிண்டால் பூண்டு ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.
இதனால் தாங்கள் மிகவும் நஷ்டம் அடைந்துள்ளோம். இந்த பூண்டை எங்களா பதப்படுத்தி வைத்து தேவை ஏற்படும்போது கொண்டுவந்து விற்பனை செய்ய இயலாது.
அதனால் பூண்டுக்கு உரிய விலையை மாநில அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று ராணிபென்னூர் டவுன் பரபரப்பாக காணப்பட்டது.