ஈரோடு மாவட்டத்தில் ரூ.151 கோடியே 57 லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.151 கோடியே 57 லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Published on

ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தந்த மாவட்டங்களுக்கான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித்திட்டங்கள் தொடக்கவிழா, புதிதாக நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை ஈரோட்டில் நேற்று நடந்தது.

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைத்தார். புதிதாக நிறைவேற்றப்பட உள்ள திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். விழாவில் 4 ஆயிரத்து 642 பேருக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இவ்வாறு மொத்தம் ரூ.151 கோடியே 57 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

முன்னதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வரவேற்றார். முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா நன்றி கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தோப்பு என்.டி.வெங்கடாசலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்), மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, சக்தி மசாலா நிறுவன தலைவர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குனர் சாந்தி துரைசாமி, மண்டலக்குழு முன்னாள் தலைவர் ரா.மனோகரன், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, ஈரோடு சிந்தாமணி இயக்குனர் பொன்சேர்மன், அ.தி.மு.க. பிரமுகர்கள் பி.ஏசையன், டி.நமச்சிவாயம், ஏ.பி.முத்துமேஸ்திரி, எஸ்.ஸ்ரீகாந்த், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரோஜா பழனிசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, புஞ்சைபுளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, அந்தியூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா தலைமையில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முன்னதாக விழா பந்தலுக்கு வந்த முதல்-அமைச்சர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் வழங்கப்பட்டன. காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டது. விழா நிறைவடைந்த பிறகு காரில் புறப்பட்டு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர் பள்ளிபாளையம் வழியாக சேலத்துக்கு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com