கோத்தகிரி,
கோத்தகிரி காம்பாய் கடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர் தனது மகன்களான சஞ்சய், கிஷோர் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில், அந்த வீட்டின் அருகிலுள்ள தடுப்புச்சுவர் இடிந்தது. இதுகுறித்து அதிகாரியிடம் தகவல் தெரிவிப்பதற்காக நேற்று காலை 12 மணிக்கு பழனியம்மாள் தனது 2-வது மகன் கிஷோரை அழைத்து கொண்டு கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். வீட்டில் சஞ்சய் மட்டும் தனியாக இருந்தான்.
இந்த நிலையில் மின்சாரம் இல்லாத காரணத்தால் வீட்டில் உள்ள டி.வி.யின் மீது மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் வீட்டின் அருகில் தடுப்புச்சுவர் இடிந்து, விழுந்து கிடந்த மண்ணை அகற்றும் பணியில் சஞ்சய் ஈடுபட்டு கொண்டிருந்தான். அப்போது வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய், வீட்டினுள் சென்று பார்த்தான். அப்போது டி.வி.யின் மீது வைக்கப்பட்டு இருந்த மெழுகுவர்த்தி, அருகிலுள்ள படுக்கையில் சரிந்து விழுந்து மெத்தையில் தீப்பிடித்து இருப்பது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்து அப்புறப்படுத்தினான். மேலும் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனத்துடன் வந்த வீரர்கள் வந்தனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகில் தீயணைப்பு வாகனத்தை கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் காம்பாய்கடை பகுதியில் தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி, அங்கிருந்து கூடுதலாக குழாய்களை பொருத்தினர். பின்னர் அந்த வீட்டுக்குள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் தீ மள, மளவென வீட்டின் மேற்கூரையிலும் பரவியது. உடனே தீயணைப்பு படை வீரர்கள் ஓடுகளால் வேயப்பட்ட அந்த மேற்கூரையில் ஏறி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டுக்குள் யாரும் இல்லாததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கோத்தகிரி தாசில்தார் மோகனா பார்வையிட்டார்.
மேலும் அரசு சார்பில் உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட பழனியம்மாளிடம் உறுதி அளித்தார்.