

வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட இருக்கன்துறை பஞ்சாயத்து 19-வது வார்டை சேர்ந்தது பனைவிளை கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி பனைவிளை கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பல நாட்களாகியும், அதில் மின் மோட்டார் பொருத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீலா பீட்டர், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்சன், சோபியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து முற்றுகையிட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இன்னும் 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீரென நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.