வள்ளியூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

வள்ளியூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் அருகில் உள்ள தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் (வயது 52) என்பவர் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வள்ளியூர் லுத்தா நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆசிரியர் டேவிட் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவிக்க பயந்து, ஆசிரியர் டேவிட் செயலை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆசிரியர் டேவிட் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் டேவிட்டை கைது செய்தனர்.

பின்னர் அவர் வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com