மணிப்பூரில் தடை செய்யப்பட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த 10 பேர் கைது


மணிப்பூரில் தடை செய்யப்பட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த 10 பேர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2025 7:08 AM IST (Updated: 5 Oct 2025 12:44 PM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்டுள்ள உக்னா அமைப்பின் கமாண்டர், மெய்தி சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே 2023 முதல் நடந்து வரும் மோதலில் இதுவரை 260 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தும், இதர பாதிப்புகளையும் சந்தித்து உள்ளனர். கலவரம் வெடித்த 3 ஆண்டுகளுக்குப் பின்பும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. பிரதமர் மோடி கடந்த மாதம் 13-ந்தேதி மணிப்பூர் பயணம் சென்று இருதரப்பு மக்களையும் சந்தித்து பேசி வன்முறையை கைவிட வலியுறுத்தினார்.

இதனிடையே, சமீபத்தில் பிஷ்ணுபூரில் ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 அசாம் ரைபிள் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், ஜிரிபாம் மாவட்டத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் போன்றவற்றால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி அசாம் ரைபிள் படையினர், ஆபரேஷன் சங்கோட் என்ற பெயரில் கடந்த 1-ந்தேதி முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுவான ஐக்கிய குகி தேசிய ராணுவம் (உக்னா) அமைப்பை சேர்ந்த மூத்த கமாண்டர் ஜம்கோகின் குய்டி என்கிற பெப்சி என்பவர் கைது செய்யப்பட்டார். இது தவிர இந்த ஆபரேசனில் மேலும் 5 பேரும் செய்து செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள உக்னா அமைப்பின் கமாண்டர், மெய்தி சமூகத்தை சேர்ந்த 4 பேரை கொன்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதேபோல் தவுபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் கங்லெய்பக் கம்யூனிஸ்டு (அபுன்பா) இயக்கத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் ‘மக்கள் விடுதலை ராணுவம்’ எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story