

பனாஜி,
உத்தரப்பிரதசேம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெறுகிறது. வரும் மார்ச் 10ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் நாட்டிலேயே சின்ன மாநிலமான கோவாவில் வரும் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இதன்படி கோவாவில் காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இருப்பினும், அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் உண்மையான போட்டி!
இந்நிலையில், கோவா தேர்தலில் சுவரஸிய நிகழ்வாக மொத்தம் 5 தம்பதிகள் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றன. நாட்டிலேயே சிறிய மாநிலமாகக் கோவா மொத்தம் 40 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டது.
இதில் தான் இப்போது 5 தம்பதிகள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 10 பேரும் தேர்தலில் வெற்றிபெற்றால் இவர்கள் மட்டும் கோவா சட்டசபையில் 25%ஆக இருப்பார்கள்.
இதன்படி இந்த தேர்தலில் போட்டியிடும் 5 தம்பதியர்:-
* மாநில சுகாதார மந்திரி விஷ்வஜித் ரானே வால்போய் தொகுதியிலும், அவரது மனைவி தேவியா போரியம் தொகுதியிலும் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
* பனாஜி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அடனாசியோ மான்செராட்டே களம் இறங்குகிறார். அவரது மனைவி ஜெனிபர் தலீகாவ் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
* துணை முதல்-மந்திரி சந்திரகாந்த் காவ்லேகர் பா.ஜ.க. சார்பில் குபெம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மனைவி சாவித்திரிக்கு சங்கேம் தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு மறுத்ததால் அவர் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார்.
* காங்கிரஸ் கட்சி மைக்கேல் லோபோவை கலங்குட் தொகுதியிலும், அவரது மனைவி டெலிலாவை சியோலிம் தொகுதியிலும் களம் இறக்கி உள்ளது.
* அல்டோனா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரண் கண்டோல்கர் போட்டியிடுகிறார். அவரது மனைவி கவிதா, திவிம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர்களில் வெற்றிவாகை சூடப்போவது யார், யார் என்பது வாக்கு எண்ணிக்கை நடக்கிற மார்ச் மாதம் 10-ந்தேதி தெரிய வரும்.