2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்ற பா.ஜனதா திட்டம்..?!

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பல்வேறு மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்றும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேசத்துக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார்.

நிதின் கட்காரி நீக்கம்

2024-ம் ஆண்டு, அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கு பா.ஜனதா இப்போதே தயாராக தொடங்கி விட்டது. சமீபத்தில், உயரிய அமைப்பான ஆட்சி மன்ற குழுவில், மத்திய மந்திரி நிதின் கட்காரி, மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டனர். பிராந்திய ரீதியாகவும், சாதிரீதியாகவும் புதிய நபர்கள் சேர்க்கப்பட்டனர்.

அந்தவகையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஆட்சி மன்ற குழுவில் இடம்பெற்றார். லிங்காயத் சமுதாயத்தினரிடையே அவருக்கு செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. இதுவரை, உயர் சாதியினர்தான் பா.ஜனதா ஆட்சி மன்ற குழுவில் அதிக அளவில் இருந்து வந்தனர். முதல்முறையாக, உயர் சாதி அல்லாதவர்கள் பெரும்பான்மை பெற்றுள்ளனர். இதுபோல், உயர் சாதியினரை திருப்திப்படுத்திக் கொண்டே பட்டியல் இனத்தவரையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் பயன்படுத்திக் கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

மராட்டியம்

சமீபத்தில், மராட்டிய மாநில பா.ஜனதா தலைவர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பட்டீல் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சந்திரசேகர் பவன்குலே நியமிக்கப்பட்டார். மராட்டிய மாநிலத்தில், சிவசேனா பலவீனமாகி விட்டாலும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான அதன் கூட்டணி நீடிப்பதால், அங்கு பா.ஜனதாவை பலப்படுத்த இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களும் சமீபத்தில் மாற்றப்பட்டனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில் பன்சால், தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பசவராஜ் பொம்மை

இந்தநிலையில், நாடாளுன்ற தேர்தலை குறிவைத்து, அரசியல் சவால்களை சமாளிப்பதற்கு மாநிலங்களில் மாற்றங்களை தொடர பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச பா.ஜனதா தலைவராக உள்ள சுதந்திர தேவ் சிங் விரைவில் மாற்றப்படுகிறார். சாதி கணக்கீடு அடிப்படையில், புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். கர்நாடக மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாரா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. காங்கிரஸ் இன்னும் பலமாக உள்ள கர்நாடகாவில், பொம்மையின் திறன் குறித்து விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். இருப்பினும், அவர் மாற்றப்பட மாட்டார் என்றே பா.ஜனதா கூறி வருகிறது.

பீகார்

பீகார் மாநிலத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டதால், பா.ஜனதாவின் பலம் குறைந்துள்ளது. எனவே, சட்டசபை, சட்ட மேலவை ஆகியவற்றின் தலைவர்கள் மாற்றப்பட உள்ளனர். சாதி அடிப்படையில் சில புதுமுகங்கள் கொண்டுவரப்படுவார்கள் என்று தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 35 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா தலைவர் நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com