

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ந்தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு 20-ந்தேதி வரை நடைபெறும். இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் அது பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில், கஜகஸ்தான், பின்லாந்து, மொரீசியஸ், பூடான், நெதர்லாந்து, கிரீஸ், குரோசியா நாட்டு பிரதமர்களையும், ஸ்பெயின், சுலோவேக்கியா, இலங்கை, எஸ்தோனியா நாட்டு ஜனாதிபதிகளையும் பிரதமர் மோடி நேற்றிரவு வரவேற்றார்.
இதேபோன்று, சர்வதேச அமைப்புகளான ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் ஜெனரல் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா ஆகியோரையும் கயானா, பொலிவியா மற்றும் செச்சல்ஸ் நாடுகளின் துணை ஜனாதிபதிகளையும் அவர் வரவேற்றார்.
இந்த உயர்மட்ட தலைவர்களின் வருகையானது, செயற்கை தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் போன்றவற்றில் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் இந்தியாவின் தலைமைத்துவம் சுட்டி காட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில், அனைத்து தலைவர்களும் பங்கு பெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, இந்த உச்சி மாநாடானது, மனிதனை மையப்படுத்திய, உணர்வுப்பூர்வம் வாய்ந்த உலகளாவிய ஏ.ஐ. சூழல் அமைப்பை கட்டியெழுப்பும்.
வரலாற்றை நாம் பார்த்தோம் என்றால், ஒவ்வோர் இடையூறையும் மனிதன் ஒரு புதிய வாய்ப்பாக உருமாற்றி கொண்டான். நாம் தற்போது இதுபோன்றதொரு வாய்ப்பை எதிர்கொண்டுள்ளோம். இந்த இடையூறை, மனித இனத்தின் மிக பெரிய வாய்ப்பாக நாம் உருமாற்ற வேண்டும் என கூறினார்.
இந்த தொலைநோக்கு பார்வையை கட்டமைப்பது பற்றி புத்தரின் போதனைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியா புத்தரின் பூமி. சரியான புரிதலில் இருந்து சரியான செயல் வெளிப்படும் என புத்தர் கூறினார்.
அதனால், ஏ.ஐ.யின் உண்மையான தாக்கம் வெளிப்படும் வகையிலான வழிமுறைகளை நாம் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டியது மிக முக்கியம். சரியான நோக்குடன், சரியான நேரத்தில் எப்போது ஒருவர் சரியான முடிவுகளை எடுக்கிறாரோ அப்போது, உண்மையான தாக்கம் ஏற்படும் என்று குறிப்பிட்டார். ஏ.ஐ.யின் வெற்றி இதில்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.