

புதுடெல்லி,
நாட்டில் கடந்த காலங்களில் போதை பொருள் கடத்தல், விற்பனை, விநியோகம் என பல்வேறு விசயங்களும் சட்ட ரீதியாக அணுகப்பட்டு, அவை முடக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் 79-வது டெல்லி போலீஸ் நிறுவன நாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, போதை பொருள் கடத்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்களுக்கான நெட்வொர்க்கை நிறுவுவது மற்றும் கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பதில் உள்விவகார அமைச்சகம் கவனம் செலுத்தும். வருங்காலத்தில் அதற்கு முறையான சட்டபூர்வ ஆதரவு அளிக்கப்படும் என்றார்.
புதிய தேச பாதுகாப்பு கட்டமைப்பை வருகிற மாதங்களில் உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறினார். இந்த கட்டமைப்பானது மாநிலங்கள் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்முறையை வலுப்படுத்துவதுடன், அவற்றை திறமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் செயல்படுத்துவது உறுதி செய்யப்படுவதற்கு ஏற்ப, முறையான சட்ட பிரிவுகளின் ஆதரவும் அளிக்கப்படும்.
நாடு முழுவதும் போதை பொருள் தொடர்பான குற்றங்களுக்கு பதிலடி கொடுப்பது மேம்படவும் மற்றும் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.