ஆந்திர பிரதேசம்: வெடிவிபத்தில் 6 பேர் பலி; முதல்-மந்திரி இரங்கல்

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தியில், வெடிவிபத்தில் பலர் பலியான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் தருகிறது என தெரிவித்து உள்ளார்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் அம்பேத்கர் கொனசீமா மாவட்டத்தின் ராயவரம் மண்டலத்திற்கு உட்பட்ட குமரிபாலம் கிராமத்தில் லட்சுமி கணபதி என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதில், திடீரென இன்று வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தியில், வெடிவிபத்தில் பலர் பலியான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் தருகிறது. வெடிவிபத்திற்கான காரணம் பற்றி அதிகாரிகளிடம் பேசி கேட்டறிந்துள்ளேன். தற்போதுள்ள சூழல், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி ஆகியவை பற்றியும் விசாரித்து உள்ளேன்.
சம்பவ பகுதிக்கு மூத்த அதிகாரிகள் நேரில் தனிப்பட்ட முறையில் சென்று, நிவாரண பணிகளில் ஈடுபடும்படி உத்தரவிட்டு உள்ளேன். காயமடைந்த நபர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் துணையாக இருப்போம் என்று தெரிவித்து உள்ளார்.






