“விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடு இ்ல்லாமல் செயல்படும்” - சுபான்ஷு சுக்லா


“விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடு இ்ல்லாமல் செயல்படும்” - சுபான்ஷு சுக்லா
x

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது உலகின் மற்ற எல்லா பகுதியையும்விட இந்தியா மிக அழகாக தெரிந்ததாக சுபான்ஷு சுக்லா கூறினார்.

புதுடெல்லி,

விண்வெளிக்கு சென்று திரும்பிய இந்தியரான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மகளிர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கெடுத்த அவர், விண்வெளி பயணத்தில் கிடைத்த சவாலான அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் முகம் வீங்கிப்போனது, முதுகுவலி ஏற்பட்டது உள்ளிட்ட விஷயங்களை கூறி உள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “விண்வெளி பயணத் திட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே ‘திரில்’ அனுபவமாக சிலிர்ப்பு தரும். அது மனித சகிப்புத்தன்மையின் ஒரு கடினமான சோதனை. நீங்கள் ஒருமுறை குறைந்த ஈர்ப்புவிசை கொண்ட விண்வெளிக்கு சென்றால் உங்கள் உடல் அந்த சூழலுடன் போராடும், எல்லாமே மாறிவிடும்.

ரத்தஓட்டம் தலைகீழாக நடக்கும். தலை வீங்கி சுற்றும், உங்கள் இதயம் மெதுவாக துடிக்கும், முதுகெலும்புகள் நீண்டுவிடுகிறது. மொத்தத்தில் உங்கள் உடலின் உட்புறம் கட்டுப்பாடின்றி மிதக்கும். வயிறு பசிக்காது.

விண்வெளியில் இருந்தபடி பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு முன்பு கடினமான சூழலில் இருந்தேன். அப்போது தலைவலி மற்றும் குமட்டலில் அவதிப்பட்டு வந்தேன். விண்வெளியில் நோய்வாய்ப்பட்டால் நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் குமட்டலுக்கான மருந்து எடுத்தால் அது உங்களை மயக்கமடையச் செய்யும்.

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது உலகின் மற்ற எல்லா பகுதியையும்விட இந்தியா மிக அழகாக தெரிந்தது. அதன் கடற்கரைகள் மற்றும் சமவெளிகள் தனித்து நிற்கின்றன.ககன்யான் திட்டம் மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் சந்திரனில் இறங்குவது போன்ற இந்தியாவின் லட்சியத் திட்டங்கள் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் மைல்கற்களாகும்” என்று அவர் பேசினார்.

மாணவர்களுக்கு அவர் அறிவுரை கூறும்போது, “நீங்கள் எந்த தவறும் செய்யாதீர்கள், அது ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களை விட அதிகமாக உங்களை உயர்த்தும். முழு நாட்டின் ஆற்றலையும் வளர்க்கும்’’ என்றார்.

1 More update

Next Story