ஜோத்பூரில் மான் குட்டிக்கு பாலூட்டிய பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்...

ராஜஸ்தானில் பிஷ்னோய் பெண் ஒருவர் மான் குட்டிக்கு பாலூட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டைப் பெற்றுள்ளது.
ஜோத்பூரில் மான் குட்டிக்கு பாலூட்டிய பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்...
Published on

ராஜஸ்தானில் உள்ள பிஷ்னோய் சமுதாய மக்கள் வனவிலங்குகளையும், மரங்களையும் பாதுகாக்க தங்கள் வாழ்வை பணயம் வைக்க தயாராக உள்ளனர். வனவிலங்குகளையும், மரங்களையும் பாதுகாப்பது அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளில் முக்கியமான ஒன்றாகவே உள்ளது. பிஷ்னோய் சமுதாய மக்கள் ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தில் மட்டுமல்லாது அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். பிஷ்னோய் இன பெண்களிடம் ஒரு அபூர்வமான பழக்கம் வழக்கத்தில் உள்ளது. அங்கு தாய்மார்கள் மானுக்கு பாலூட்டுவது இயல்பாக பார்க்கக்கூடிய காட்சியாகும்.

தாய்மான் ஒன்று இறந்துவிட்டால் அனாதையாகும் மான் குட்டிகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகுதான் குட்டிகளை காட்டில் விடுவார்கள். பிஷ்னோய் மக்களுக்கும் கானகத்திற்குமான உறவு பிரிக்க முடியாத பந்தம் இருந்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் பிஷ்னோய் பெண் ஒருவர் மான் குட்டிக்கு பாலூட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது. பர்வீன் கஸ்வான் என்ற ஐஎப்எஸ் அதிகாரி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில் புகைப்படத்தை பகிர்வு செய்துள்ளார். "ஜோத்பூரில் உள்ள பிஷ்னோய் சமூக மக்கள் விலங்குகளை இவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள். இந்த அழகான விலங்குகள் அவர்களுக்கு குழந்தைகளுக்கு குறைவானவை அல்ல. ஒரு குட்டிக்கு பெண்மணி ஒருவர் பாலூட்டுகிறார்" என்று பதிவு செய்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவருடைய பதிவிற்கு 4000த்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பலரும் தங்களுடைய பாராட்டை டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com