

புதுடெல்லி,
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை.
வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், வினாத்தாள் வெளியான சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என்றார். மேலும், இரு பாடங்களுக்குமான மறு தேர்வு நடைபெறும் தேதியை வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சிபிஎஸ்இ வெளியிட வாய்ப்பு உள்ளது" என்றார்.