நாடாளுமன்றத்தில் அமளி - பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

வெளிவராத புத்தகத்தை மேற்கோள் காட்டுவதா? என ராகுல் காந்திக்கு அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அமளி - பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி(நேற்று) தாக்கல் செய்தார். இதையடுத்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 2020 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான லடாக் மோதல் குறித்து முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் குறித்த பத்திரிகைக் கட்டுரையை வைத்து இன்று நாடாளுமன்றத்தில் தனது உரையைத் தொடங்கினார். மேலும் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளிவராத புத்தகத்தை மேற்கோள் காட்டுவதா? என ராகுல் காந்திக்கு அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தார். நேரு ஆட்சிக்காலத்தில் இந்திய நிலப்பகுதி விட்டுக் கொடுக்கப்பட்டதாக பா.ஜ.க. எம்.பி.க்கள் குற்றச்சாட்டினர்.

மேலும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டதாக சுட்டிக்காட்டினார். அதோடு, செய்தித்தாள்களில் வரும் கட்டுரைகளை அவையில் மேற்கோள் காட்ட முடியாது என்று சபாநாயகர் ஏற்கனவே கூறியிருப்பதாக குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி விதிகளை மீறி நடந்து கொள்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிலவிய கடும் அமளியை தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா பிற்பகல் 3 மணி வரை மக்களவையை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com