சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்யவும் உத்தரவு


சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்யவும் உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2025 11:21 AM IST (Updated: 8 Oct 2025 2:47 PM IST)
t-max-icont-min-icon

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு - ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் சிறுமி ஹாசினி மாயமானார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் - சரளா தம்பதியரின் மகன் தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் தஷ்வந்திற்கு மரண தண்டனை கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றத்தை நிரூபிக்க தவறியதாகக் கூறி விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, சிறுமி வன்கொடுமை வழக்கு நடைபெற்ற போது ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்து விட்டுத் தப்பினார். இதனைத் தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் தஷ்வந்த்தை மும்பையில் கைது செய்தது. ஜாமீனில் வெளியே வந்து தாயைக் கொன்ற வழக்கில், தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story